Friday, August 17, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும் - 3


இதற்கு முந்தைய பதிவுகளுக்கு இங்கே இங்கே

அடுத்து, உங்கள் இரத்த சர்க்கரை சோதிக்க சிறந்த நேரம் எப்போது என்ற கேள்வி.

மருத்துவர்கள் பொதுவாக காலை வெறும் வயிற்றில், மற்றும் மதிய உணவுக்கு முன்  சோதிக்க சொல்கிறார்கள். இது வெறும் வயிற்றில் என்பதால்,120mg/dl என்று காண்பித்தால், நல்ல ரீடிங்காக தோன்றக்கூடும். ஆனால் ஒவ்வொரு உணவுக்கு பிறகும் , சோதித்தால்,(ஒரு மணி நேரம் கழித்து) இரத்த சர்க்கரை ஒருவேளை 250 mg / dL  என்று தெரிய வரலாம்.இந்த அதிகமான அளவை காலை வெறும் வயிற்றில் ரீடிங் எடுக்கும் போது ,அறிய முடியாது.

குறிப்பாக சமீபத்தில் கண்டறியப்பட்டது என்னவென்றால், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு, இன்னும் சில பீட்டா செல் செயல்பாடு தொடரும் நிலையில் உள்ளவர்களுக்கும் ,அந்த உணவு உள்ளே போன பின், சக்கரை அளவு, ஏற்று முகமாக இருப்பதினால், எச் பி A1c உயர்வதும், மற்றும் சில சிக்கல்கள் வரவும் நேரிடலாம்.

நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை காலையில் மட்டும் சோதித்து, சாப்பாட்டுக்கு பிறகு சுர்ரென்று ஏறுமுகம் ஆகும் போது, எந்த உணவினால் அப்படி ஏறுகிறது என்று தெரியாமல் விழிக்க வேண்டி வரும். அதனால் எந்த ஆபத்தான  உணவுகள் , உங்களுக்கு நச்சு என்பதை கண்டறிய முடியாது.


.இப்போது, பரவலாக மக்கள் , மிகவும் விலை உயர்ந்த இரத்த சர்க்கரை பரிசோதனை பட்டைகள் மூலம் பரிசோதனை செய்வதை, காண்கிறோம். இது பணம் செலவு தான். ஆனால்,  திறமையாக முடிந்தவரை, ஒவ்வொரு பட்டையும் பயன்படுத்தி,அதனால் நன்மை அடையலாம்.

முதலில்,சோதனை விளைவுகளை, ஒரு குறிப்பீடாக , நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு முறையும், பதிவு செய்து கொள்ள வேண்டும்.
என்ன உணவு சாப்பிட்டபின், இந்த ரீடிங் எடுத்தோம் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதனால் சக்கரை அளவு ஏறியவுடன், எந்த உணவினால் , இந்த விளைவு ஏற்பட்டது  என்று அறிவது எளிது,சாப்பிட என்ன பொருந்தும் என்று அறிவதும் சுலபம்.

சாப்பிட்ட எந்த உணவு அதிக அளவுக்கு சர்க்கரையை உயர்த்துகிறதோ, அந்த உணவை தவிர்த்து விட வேண்டும்.இரத்த சர்க்கரை உயர்த்தாத உணவுகளை எளிதாக கண்டறியலாம்.
இரத்த சர்க்கரை உச்சத்தை அடையும் போது தேவையான தகவல்களை சேமித்து , வைப்பதில் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இங்கே, இலக்கு ,சிக்கல்கள் தரும் அளவுக்கு  கீழே , இரத்த சர்க்கரை உச்சங்களை(பீக் சுகர் லெவல்) கொண்டு வருவது தான். இதை கணக்கிட,இரத்த சர்க்கரை அதன் உச்ச அளவை அடையும் போது ,அளவிட வேண்டும்.

இதை அறிய கடைபிடிக்க பட்ட ஆராய்ச்சிகளில் , ஒரு சராசரி நபருக்கு , உணவு உண்ட 75 நிமிடங்கள் கழிந்த பின், இரத்த சர்க்கரை உச்ச அளவை அடைகின்றன, என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் , தனி மனிதனின் உடல் அமைப்பு, ஒருவர் போல் மற்றொறுவர் இல்லை. தனித்தனமை உள்ள மனிதர்கள் ஆதலால்,  அவரவர் தம் இரத்த சர்க்கரை உச்சம் ஏற்படும் நேரம் எப்போது என்று கண்டறிவது, மிக முக்கியம்.

சாப்பாட்டிற்கு பிறகு,1 மணி, 1.5 மணி நேரம், 2 மணி நேரம், மற்றும் 3 மணி நேரத்தில் ,மூன்று வேளைகளிலும் பரிசோதிக்க வேண்டும்.இப்பொது  உச்ச கட்டம் எந்த சமயத்தில் நிகழ்ந்தது என்று தெரிய வரும். அதை அறிந்த பின், தொடர்ந்து அதே நேரங்களில் பரிசோதனைகளை செய்யும் வழக்கம் வைத்துக் கொள்ளலாம்.’எனக்கு தூக்க நேரம், எனக்கு ஆபீசில் முடியாது’ என்ற சாக்கு போக்குகளை, டயபிடீஸ் அரக்கனை மனசில் வச்சு, உதறுவதும் நல்லது.

டெஸ்ட், நம்மளே செய்துக்கலாம் என்ற தைரியமே , பாதி கிணறு தாண்ட வைக்கும். மேலும், திரும்ப திரும்ப சோதனைக்கு, செல்வது கட்டுபடியாகாது. அந்த ஊழியர் நம் ரத்தம் சிரிஞ்சில் எடுப்பது ஒன்றும் சுகமான அனுபவம் இல்லையே!


குறிப்பை பார்த்து, சாம்பார் சாதம் சாப்பிட்ட பிறகு இருக்கும் ரீடிங்க் எகிறித்து என்றால்… அந்த நிமிடமே அதற்கு முழுக்கு போடுவது நலம்!

மற்ற வகைகளும் வேறே மாதிரியான ரீடிங்க் காட்டும் விசித்ரமும் உண்டு. சரி அரிசி சாப்பிட்டால் , எகிறுது, சப்பாத்தியை ஒரு கை பார்த்து ரீடிங்க் எடுத்தால் , அது இன்னும் அதிகமாக காட்டலாம். அதே சமயம்,
பக்கோடாவுக்கு ஒரு குறைவானதாகவும் , உருளை கிழங்கு பஜ்ஜிக்கு அதிகமும் காட்டும் விசித்ரமும் உண்டு. காலி ப்வளர் , குறைவாக காட்டலாம், பீன்ஸ் மிக அதிகமாக இருக்கலாம்.
 

இட்லீ என்பது எவ்வளவு எளிய உணவு,அதிக ரீடிங்க் காட்டும் வேதனை.. அதே சமயம்  ஆம்லெட் சாப்பிட்டால், குறைவான ரீடிங் வருவதும் சகஜம்.வெண்ணெய். சீஸ் போன்றவையும் குறைவான ரீடிங் காட்டலாம்.
ப்ரெட், பொதுவாக எல்லோருக்கும் அதிகமாகவே காட்டுகிறது.

பல வாரங்கள் இந்த பரிசோதனைகளை , செய்ய வேண்டிய கட்டாயம், உள்ளது. பல வகை உணவுகளை மாற்றி உண்ணும் போதும் குறிப்பில் எழுதி ரீடிங்க் எடுக்கவேண்டும். ஒரு சில நாட்களுக்கு பிறகு, இந்த ரீடிங்க் எடுப்பது பழக்கமாகி விடும். ஸ்டைலாக, கருவியை உருவி , பர பரவென்று, ஊசியால், குத்தி , ஒரு பார்வை பார்த்து, ரீடிங்கை படித்து, வீட்டில் மத்தவங்களை ஒரு லுக் விடுவதில்…. ஒரு சுகம்!

பரிசோதனைகளில் , ஒரு சீரான முறையில்,  முடிவுகளை காணலாம். இதிலிருந்து, எந்த நேரம் , சர்க்கரை அதிக அளவை அடைகிறதோ, அதை வழக்கமான , பரிசோதனை நேரமாக ஏற்றுக் கொள்ளலாம்.(நான் உணவுக்கு ஒரு மணி பிறகு, அளப்பது வழக்கம்).

ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உச்ச கட்ட ரீடிங் காண்பிக்கும் உணவுகளை தவிர்ப்பது கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

சரி, டெஸ்ட் செய்து விட்டு, உணவுகளை தவிர்ப்பதில் தயக்கம் காட்டி , மாற்று உணவுகளை உண்ண முயற்சிக்காவிடில், சோதனை பட்டைகளை வாங்கி பணம் வீணடிப்பதில் என்ன பயன்?

இந்த மாதிரி சக்தி வாய்ந்த கருவியை பயன்படுத்தி , நீரிழிவு நோய் உள்ளவர்கள் , உடல் நிலையை ஆரோக்யமாக வைத்திருக்க, முயற்சி செய்யவேண்டும். இதற்கு ஒரே வழி,கார்போஹைட்ரேட் உணவு குறைத்து உண்பதே. இவை தான் இரத்த சர்க்கரை உயர்த்தும் லேபிள். ,அவை ‘நல்ல கார்போவோ,’ அல்லது "குறைந்த கிளைசெமிக்" (என்று பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்ற வகைகள்) உள்ளதோ,எதுவானதானாலும்!

இரத்த சர்க்கரை அளவு , எந்த  உணவு உண்ட பிறகு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால்,(உ.ம். அரிசி சாப்பாடு, அல்லது சப்பாத்தி, அல்லது ஓட்ஸ்..) அந்த கார்போஹைட்ரேட் உணவை,எங்கிருந்து வந்தது என்பதை தீர்மானித்து, குறைத்தோ அல்லது முற்றிலும் அதை அகற்றியோ விட வேண்டும்.
ஊட்டச்சத்து 'லோ கார்ப்' எங்கே என்று கண்டறிய உதவும் அட்டவணைகளை நெட்டில் பார்த்து , உணவு வகைகளை , தயாரிக்கவும் உண்ணவும் பழக்கம் செய்து கொள்வது நல்லது. 

கீழே உள்ள இந்த இலக்குகளை பயன்படுத்தி  நல்ல ஆரோக்யத்துடன் சீரான இரத்த சர்க்கரை அளவும், எச் பி A1c அளவு 5% வாக்கிலும் அடைவது சாத்தியமே.

சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம்: 140 கீழ் mg / dl (7.8 mmol / L)
சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம்: 120 கீழ் mg / dl (6.7 mmol / L)
நீங்கள் இதை விட சிறப்பாக செய்ய முடியும் என்றால், அது போனஸ்.
சாதாரணமாக  120 mg / dl கீழே போவது அரிது.
எப்போதாவது 100 (கீழ் சாப்பிட்ட பிறகு 2 மணி நேரத்தில்) 100mg / dl. ஆகவும் வாய்ப்புகள் உண்டு.

எனக்கு, முதல் சில மாதங்கள், அரிசி உணவும், கோதுனை உணவும், மிக அதிக அளவாக காண்பித்தன. அதை தவிர்த்து , காய் கறிகளை அதிகமாக்கி, மோர் அதிகமாக சேர்த்து, சக்கரை அளவு குறைந்ததை , கண்டேன். குறைந்த அளவில் உண்டு, மீண்டும் இரண்டு மணி நேரத்தில் பசித்தால், பழ வகைகளை அளவாக உண்டு சமாளித்தேன். இப்போது, எந்த உணவு எனக்கு ஒவ்வாது என்று அத்துப்படி ஆகி விட்டது.
விருந்துகளில் , முன்பெல்லாம், ப்ளேட் மீதும், அடுக்கப்பட்ட உணவு மீதும் பார்வை இருக்கும். இப்போது, நண்பர்களை தேடி பிடித்து , பேசி, மகிழ்கிறேன். ப்ளேட்டை பார்ப்பதே கிடையாது. இனிப்பு வகைகள் அறவே ‘நோ,நோ’.. வீடு வந்த பிறகு, ஒரு பழம் , பால் உள்ளே தள்ளி, ஆரோக்யமாக இருக்க முயற்சிக்கிறேன்.

உறவுகளும், கேள்விகள் கேட்பதை நிறுத்தி, அசுவாரசியம் அடைந்தாயிற்று. 'உடல் இளைச்சாப்போல இருக்குதே' என்று விசாரிப்புகளும் அதிகமாகி விட்டது. ஒரு சிலர் டயட் ரகசியத்தை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் காட்டுகிறார்கள். அமர்த்தலாக, 'லோ கார்போ டயட்' என்று பீத்திக்கொள்கிறேன். 


பின் குறிப்பு. இது என் அனுபவங்கள். மேலும் விவரங்களுக்கு , ஆலனின் புத்தகத்தை படிக்கவும். அவரது பதிவுகளும் உண்டு. எந்த மாதிரி மாற்றத்தையும், டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது தேவை.



 Images. Courtesy Google.