Wednesday, May 23, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும்

சில நேரங்களில், வாழ்க்கை எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர உடல் வாகுடன், பெரிய வியாதிகளோ உபாதைகளோ இல்லாமல், மும்முரமாக வாழ்ந்த்து கொண்டிருந்தேன்.

 அதில் அலட்டல்,என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல் இருப்பது என்ற வீண் பெருமை வேறு..

 கடந்த சில ஆண்டுகள், என் வாழ்க்கை ஒரு எதிர்பாரா  திருப்புமுனையில் இருந்தது. விரும்பத்தகாத ஏற்ற தாழ்வுகளை , கொந்தளிப்பு மற்றும் நிறைய மாற்றங்களை துணிச்சலுடனும் மனோ திடத்துடனும் எதிர் கொள்ள நேரிட்டது.

 அப்போது கூட நான் எந்த சுகவீனமும் இல்லை என்று அல்ப மகிழ்ச்சியில் இருந்தேன். திடீரென்று ,  Pride went before the fall. என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப, உடல்நிலை , சோர்வு, வீட்டில் வேலைகளும் , குடும்ப தடுமாற்றங்களும் அலை கழித்தன. அந்த நேரங்களில் வேலையின் காரணமாக , அலைச்சலினாலும் தான் உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதுன்னு, நானே என்னை தேற்றிக் கொண்டேன். வீட்டிலேயும் எப்பவும் இவங்க சொல்ற முனகல் தானே என்று இருந்தனர்.

 இரவு நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி. கால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன. இதில் தீபாவளி, விருந்தினர்கள் வருகை, பேத்தி பிறந்த மகிழ்ச்சி, இன்னும் எத்தனையோ காரணங்கள், டாக்டரிட்ம் போகாமலிருக்க .. நாம தான் சொந்த வைத்யர் வேறே. ஹி..ஹி.. எல்லம் சரியா ஆகும் என்று மனதுக்கு தேறுதல் வேறே..

 படித்த, சில பல விஷய ஞானம் இருந்தும் , பயனில்லை. நடுவில் குழந்தையை பார்க்க ஒரு நீண்ட பயணம் !! அங்கே போனதும் உடல் ஒத்துழைக்க மறுத்து , சம்பந்தியும் கவலை பட , ஒரு முடிவு எடுத்தேன், ஊர் திரும்பினதும் டாக்டரை பார்த்தாகணும்னு.


 இப்போ ட்ராமா ஆரம்பம்; அந்த அய்யா நம்மளை பாத்தவுடனே பி.பி. குழாய அழுத்தி ரத்த அழுத்தம் இவ்வளவு முத்தி இருக்கேன்ன போது, நம்ம முகம் பேயறைஞ்சாயிற்று.. அடுத்து, அந்த அய்யா சொன்னது இன்னம் பலத்த அடி. சரி இத்தோட போச்சுன்னு இருக்காதீங்க, சக்கரை, பின்னடியே இருக்குது போல, டெஸ்ட் பண்ணுங்க- ன்னு சிரிச்சுகிட்டே போட்டு உடைத்தார்(ன்)! அவ்வளவு சந்தோசமா எனக்கு வியாதி வந்ததை கொண்டாடினா மாதிரி தெரிந்தது. ( அப்புறம் அந்த ஆளை பார்க்கவேயில்லயே). ஆனால் வியாதி பத்தி இப்படி அதிரடியா சொல்லி பயமுறுத்தின சீனை, எத்தனை நாளானும் மனசிலிருந்து எடுக்க முடியலையே , நாம தான் ஒரே சென்சிடிவ் ஆளாச்சே. அதுக்குள்ள, நம்ம குடும்ப வைத்தியர் வந்துட்டாரில்ல. அவர் ஒரு பெரிய பட்டியலை கொடுத்து, மாத்திரைங்க எல்லாம் தின்னு, ஒரு மாதம் கழிச்சு மறுபடி டெஸ்ட் பண்ணுங்க –ன்னு அன்பா சொன்னார். அவருக்கு ஒரு மகிழ்ச்சி தான் , ஏன்னா அவரும் ஒரு டயபெடாலஜிஸ்ட் !

 இனி சாப்பட்டில் இனிப்பு கூடாது, சுகர் ப்ரீ காப்பிக்கு, 5 மைல் நடங்க..எத்தன கட்டளைகளை அள்ளி வீசுராங்க!

 இது நடுவில, நம்ம பேமிலி ப்ரண்டும் ஒரு டாக்டர். அவரும் சக்கரை ஆள்தான். அவரும் தன் பங்குக்கு, ஆறுதல் சொல்லி, இன்னும் சில மருந்துகள் சாப்பிடணும்னு அறிவித்தார். நம்ம ஏகாம்பரமோ, கண்குத்தி பாம்பு மாதிரி , மாத்திரை போடு என்று அதிரடி. நாம்பளும் எல்லார் சொன்னதையும் ஒழுங்கா பாஃலொ பண்ணி, இனிதே (இனிப்பு மைனஸ்) 16 மாதங்கள் கடத்தி.. .


 அப்பாடா மாத்திரைகளை விழுங்கி, சக்கரையை அறவே நிறுத்தி, சக்கரை வியாதியை ஒரு வழி பண்ணி விட்டாச்சுன்னு, சந்தோஷம்


 இந்த கட்டத்தில, பல முறை டெஸ்டிங்க்… திடீர்ன்னு, சக்கரை மறுபடியும் … சோதனைகள் குளுக்கோஸ் அளவு இன்னும் அதிகம் காண்பித்தது நாம் தான் எல்லாத்துக்கு ஒரு விளக்கம் சொல்ல தயாரா இருக்கறமே!

 ‘ ஓ! சில நாளா, சாப்பாடு கண்ட்ரோல் தளர்ந்து விட்டது காரணம் என்று, மனச தேத்தி, டாக்டரிடமும் அதையே சொல்லி என் வைத்திய அஞ்ஞானத்தை வெளி காட்டினேன். அவர் ஒரு நமட்டு சிரிப்பு காட்டி , சுகர் மருந்தை இரட்டிப்பு செய்து, அவருக்கு தெரிந்த கடையிலேயே வாங்கணும்னு, அன்பு கட்டைளயும் இட்டார். நாம்பளும் எல்லோரும் இன்புற்று இருக்க , அப்படியே செய்தாயிற்று.. கை நிறைய மருந்துகள், மனசில் கொஞ்சம் தயக்கம்.. அதான் .. நம்ப மூளை ஒத்துக்க மாட்டேன்னு … நமக்கு தான் மாத்திரைகள் மீது அவ்வளவா நம்பிக்கை இல்லையே..ஆனாலும் ஏகாம்பரத்தின் முறைப்புக்கு பயந்து , விழுங்க ஆரம்பித்தேன்., மூன்றே நாட்கள் தான், மாத்திரை தின்னாலும் , மயக்கமாக இருக்க ஆரம்பித்தது. படுக்கையிலே படுத்தபடி இருக்க வேண்டியதாயிற்று.

 என்னடா இது? இத்தனை மாத்திரைகள் , ஆனால் ஏன் இப்படி ஒரு சோர்வு, மண்டைக்குள் ஏதோ ஒரு படகில் போகும் ஆட்டம், ஒரே தூக்கம். என் மகளுக்கும் கொஞ்சம் கவலை வந்தது. மனதில் ஒரு யோசனை, இந்த டாக்டர் மிக அதிக அளவில் , வீரியமான மருந்துகளை கொடுக்கும் வழக்கம் உள்ளவர், ஆகவே, நம்ம கணினியை நாடி, தேட ஆரம்பித்தேன். படிக்க , படிக்க , சந்தேகம் வந்தது. மருந்து ஒரேடியாக அதிகப்படுத்தினதால் எனக்கு வந்த விளைவுகள், இருக்கலாம் என்று. மகளும் படித்துவிட்டு, அப்படியே இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாள்.

 உடனே டாக்டரை கேட்டால், அவர், தான் பிஸி என்றும், மருந்தை குறைத்து விடுங்கள் என்றும் கட்டைள இட்டு விட்டு, என்னை பற்றி மறந்து போனார். எனக்கு ஒரே தார்மீக கோபம், என்ன டாக்டர் இவர், பணம் தான் குறி, மருந்து கடை கூட இவர் பரிந்துறைதானே. அதிக டோஸேஜினால் வரும் விளைவுகளை என்னிடம் சொல்லாமல் இருந்ததை பற்றி எரிச்சல் வேறு. பழையபடி, குறைந்த மருந்தினால் வரும் விளைவுகளை யாரிடம் சொல்வோம் என்று தடுமாற்றம்.

 மறுபடியும், தைரியத்தை துணை கொண்டு, நம்ம சமாளிக்கலாம், சாப்பாட்லே கட்டுப்பாடு, வாக்கிங் ..( சர்க்,சரக் .. நடக்குறது அவ்வளவா விருப்பம் இல்லாம)…சில வாரங்களாயிற்று. மறுபடி, ரத்த சோதனை, நமக்கு சோதனை..

இன்னும் ரத்த க்ளூகோஸ் குறையமாட்டேன்னு அடம். இனி என்ன செய்வது? சமையல் செய்யும் போது, நமக்கு ஒன்று, தனியாக யார் செய்வார்கள் என்ற அலுப்பினால், கிடைத்ததை தின்று, அசட்டை வேறு.

 உடல், நமக்கு நினைவு படுத்தும் முறைகள், ஒரு அற்புதம். அதை புரிந்து கொள்வது முக்கியம். சக்கரை நோய் பற்றி விழிப்புணர்வு பெற , நமக்கு அதை பற்றி தெரிந்து கொள்வது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

 இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு டாக்டர் ‘சக்கரை மருத்துவர் என்று பலகை மாட்டி , மருந்துகளை நம் வயிற்றில் போட மிக முனைப்பாக இருக்கிறார்கள். நாமும் இந்த மருந்துகள், நம் உள்ளே சென்று எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யவாய்ப்புள்ளன என்று தெரியாமலே , நம் உடலை இன்னும் கெடுத்து கொள்கிறோம்.

 மனதில் நச்சரிக்கும் எண்ணங்களை தடுக்க முடியாது, "நான் இதை செய்ய வேண்டும், நான் மருத்துவமனையில் படுக்கையில் முடிவடைய விரும்பவில்லை, நான் மற்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்க வேண்டாம்" என்று முடிவு செய்து ஒரு பெரிய சாதனை, - முதல் வேலையாக குளுக்கோஸ் மானிட்டர் வாங்கியது. இதில் ஏகாம்பரத்திற்கு உடன்பாடு இல்லை. ஏன் இவ்வளவு செலவு, உன்னால் அதை பயன்படுத்த முடியாவிட்டால் வீண்தானே( நம்ம சுபாவம் நம்மளை விட அவங்களுக்கு தெரியும்னு ஒரு நம்பிக்கை தான்.) நாம தான் இதை வாங்கி ஆக வேண்டும்னு அடம் பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தாயிற்று..

 அவரை தவறு என்று நிரூபிப்பதற்றகாகவே, மானிடரை எப்படி பயன்படுத்துவது என்று விழித்து, ஒரு சுப தினத்தில் ஆரம்பித்தேன். (2 மாதங்கள் கழித்து).

 OneTouch அல்ட்ரா 2 புரிந்து கொள்ள முயற்சி;, 

முதல்ல, மீட்டரை வெளீலே எடுத்து, ‘ஆன்’ செய்யணும். ஊசி எடுத்து (மகள் அதை ஏற்கனவே பொறுத்தி வைத்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்து (முருகா மருகா,) கையில் குத்தி ஆயிற்று. ரத்தம் சொட்டு வந்தது. அந்த ‘ஸ்டிரிபை’ (கீற்று) அதன் இடத்தில் குத்தி , ஏதாவது மானிடரில் தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்தால்… ஒன்னும் இல்லை. அவசரமாக ‘ஸ்டிரிப்’ குப்பையில் போட்டயிற்று.

 ஏகாம்பரத்தின் பார்வையை தவிர்த்து, இனிமே ஏதானும் புது முயற்சி செய்தால், தனிமையில் செய்யணும் - ஜகா வாங்கினேன். அந்த பார்வை கொடுத்த ஊக்கம்(?) , ‘என்னால் முடியும்’ என்று மனதில் வைராக்யம், சில ஸ்டிரிப் வீணா போனாலும், எப்படியாவது , இதை செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் வேறு. அப்போதைக்கு அவசரமாகச் சுருட்டி வைத்து விட்டு, வேலையை பார்க்க போனேன். ஆனாலும் சுய பச்சாதாபத்தில் சில கண்ணீர் துளிகளை தவிர்க்கமுடியவில்லை.

அடுத்த நாள், மீண்டும், "என்னால் இதை செய்ய முடியும் " என்று,மறுமுயற்சி. தவறான பக்கத்தில் துண்டு நுழைத்து, இன்னும் ஒன்று வீணாகிவிட்டது. மரியாதையாக , விளக்க புத்தகத்தை எடுத்து (முதலிலே செய்திருக்க வேண்டிய வேலை) சரியாக படித்து, மறுமுயற்சி!

 துண்டு’ சரியான திசையில் , ஆழமாக நுழைக்க, தானாகவே கருவி, ஆன் ஆயிற்று. இறுதியாக, ‘ மானுவல்’ படிக்க பொறுமை வந்து (சரியாக மற்றும் ஆழமான துண்டு செருகி - அது தானாகவே வரும்), அதை துவக்க, உற்சாகமாக இருந்தது.

 அடுத்து, ‘ லான்சட்’. அதனுடன் தடுமாற்றம்- மேலும் தவறுதலாக 6 நிலைக்கு வைத்து, குத்தி ..’ஊச்ச்’ .. Oooch .. அதிர்ச்சி, நிலை! 3 அல்லது 4 இருத்தல் போதும் . ,சாதனை .! சோதனை செய்ய வந்து விட்டது! ஹையா! -D

 ஆனால் எல்லாவற்றையும் கிண்டலாக , வேடிக்கை யாக பார்க்க முடியவில்லை., மீட்டர் அதிகமாக , மெகா அளவீடுகளை காட்டுது.

 பரவாயில்ல, நம்மதான் உற்சாகத்தில இருக்கிறோமே, எப்படியாவது, இந்த போராட்டம் , செய்து தான் ஆக வேண்டும் , ஒரு வைராக்யம். என் க்ளூகோஸ் எண்கள், சரியான நிலை அடையும் முன் கீற்றுகள் நிறைய வீணடிக்க வேண்டும்.போனால் போகட்டும்.

 இது ஒரு ஆரம்பம்.

 PS: எனக்கு , தற்செயலாக ஒரு பெரீய்ய உற்சாகம் கிடைத்தது- வர்ஷா திவாரி என்றவர் பதிவு (http://wholesomeoptions.blogspot.com/2011/04/eat-your-way-out-of-diabetes.html), என்னை இந்த சக்கரை வியாதியை வேறே கோணத்திலும் அணுக முடியும் என்று வழிகாட்டியது..

 அந்த வலைப்பதிவில் இருந்து வந்த தகவல் ‘ஆலன் ஷான்லே’ வலைப்பதிவு, மற்றும் அவரது புத்தகம் (Alan Shanley “what one earth Can I eat”.) அந்த புத்தகத்தை பத்தி படிச்ச உடனே வாங்கி ஆக வேண்டிய உந்துதல்.

 இது மெலிதான தொகுப்பு, விலை கொஞ்சம் அதிகம், அவர் மீண்டும் மீண்டும் சொல்வது "சோதனை, சோதனை, சோதனை" கீற்றுகள் செலவு , விலை ஒன்றும் சல்லிசாக இல்லை, ஆனால் நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை தெரிந்து கொள்ளவும் , அளவை குறைக்க என்ன செய்யலாம் என்றும் கோடி காட்டுகிறது,

 மேலும் இந்த அளவை குறைப்பதில் நம் பங்கு தான் முக்கியம் என்றும் வலியுறுத்துகிறது. இந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும் என்பதால், நம் கையில் ஒரு பலம் கிடைத்த மாதிரி ஒரு திருப்தி அளிக்கிறது.

 என் இரத்த குளுக்கோஸ் அளவுடன் சண்டையிட்டு வெல்ல இந்த புத்தக ஆசிரியர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இது ஒரு சவால், ! வாசகர்களே! நான் சமாளிக்க போகிறேன். என்னால் முடியும்.

All images courtesy Google.

 தொடரும்…