Sunday, March 4, 2012

சாலை வெறி

வாகனங்களில் ரேஸ் விடும் மூர்க்க குணம் பலருக்கு உண்டு. ஓரு மனிதனின் குணாதிசயத்தை அவன் வண்டி ஓட்டும் அழகை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 சாலைவெறி இப்போதெல்லாம் அதிகமாகி விட்டால் போல தெரிகிறது. ஒரு பேஷனாகி விட்டது. இளைஞர்களோ, பொறுப்புள்ள பணி செய்பவர்கள் ஆயினும், வண்டி கையில் இருந்தால், அவ்வளவு தான், பிச்சிகிட்டு போக அவசரம். பின்னால் வருபவரோ , முன்னால் வருபவரோ ஒரு பொருட்டே இல்லை!

 எங்கள் ஹைதெராபாத் சாலைகளின் வாகன போக்குவரத்து உலக புகழ் பெற்றது. போக்குவரத்து சிவப்பு விளக்குகள், சும்மாவே எரிகிற மாதிரி அதை அலட்சிய படுத்தி , ரோட்டு அவர்கள் சொத்து என்று போவோர்கள் அதிகம். டிராபிக் போலீஸ் , மாத்திரம் எவ்வளவு ஒழுங்கு செய்ய முடியும்?

 இன்னும் அதிக கார்கள் விற்பனை, இன்னும் வண்டி ஓட்டிகள், இன்னும் சிறந்த பகட்டான கார்கள், அற்பமான ஓனர்கள், மேலும் "வீராப்பு காட்ட விரும்பும் தறுதலைகள்" (சாலையில் மட்டும், ) எப்போதும் மீ த பர்ஸ்ட் கட்டாய ரேஸ் ஆட்கள், எல்லோரும் சேர்ந்தால் , ஒழுங்காக சாலையை பயன்படுத்த விரும்புவர்களுக்கு தலைவலி தான்..

இது சாலைகளில் மட்டுமல்ல, எங்கே வேண்டுமானாலும் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன. சிலர் ஸ்கூட்டரில் போகும் போது, வேகத்தை அழுத்தி , ஆரனை அடித்து , ரோட்டில் போவோர்களை கதி கலங்க அடிப்பார்கள். இந்த மாதிரி ஆட்கள் கையில் கார் கிடைத்து விட்டால் போச்! தலைவலி போய் திருகு வலி வந்தா மாதிரி தான். ஏன்தான் இப்படி? இன்னும் எனக்கு புரியவில்லை. கடவுளே ஏன் இந்த அல்பதன்மை? மற்றவர்களை விட தான் ‘பெரீய்ய இது’


                                                       (courtesy Google)

 இந்த பில்ட்டப் எதுக்காக என்றால்…

சில நாட்கள் முன்பு..

 எங்கள் வீடு ஒரு தனியான கிளை சாலையில் உள்ளது. சாலை முடிவில் ஒரு சுவர். அழகான அமைதியான இடம். நான்கே வீடுகள், முன்னாலும் ஒரு மினி காடு மாதிரி பெரிய மனை. நகரத்தில் அமைதியான தெரு என்றால் மகிழ்ச்சி தான். அக்கம் பக்கம் எல்லாம், ஒரே சமயத்தில் வீடு கட்டினவர்கள். ஆகையால் பிரச்சினைகள் அதிகம் இல்லை.

இதற்கு கண் பட்டற் போல, கடைசி வீட்டிற்கு குடி வந்தார்கள். எப்போதும் இரைச்சல் தான். இருப்பது மூன்றே பேர் ஆனாலும் அப்பா , செல் பேச ரோட்டு தான் இடம், அதுவும் சத்தமாக! கார் வீட்டின் முன்னால் நிறுத்த மாட்டார்கள். அடுத்த வீட்டின் முன் நிறுத்தி சத்தமாக டப்பங்குத்து பாட்டு போடுவார்கள். எத்தனை முறையோ எடுத்து சொல்லி , இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. வேலைக்காரியுடனும் சத்தம் தான். இருக்கும் ஒரே சின்ன பையனும் அநாயாசமாக, கத்தல் கூச்சல் அழுகை தான்.


பெரிய வீட்டில் இருப்பவர்கள் ரோட்டில் ஏன் குடி இருக்கிறார்கள்? சின்ன வயசில் ரோட்டில் வாழ்ந்து வழக்கமோ?

அந்த மனிதனின் காரில் வரும் பாட்டுக்களும் அந்த ஆரன் அடிக்கும் சத்தமும் , இரவு எந்த நேரமும் கேட்கலாம். அவன் காரை வேகமாக, சர்ர்என்று வளைத்து, இந்த கிளை ரோட்டுகளில் (‘யூ வளைவு’) வேகமாக ஓட்டுவது பெரிய ரோதனை. அவன் ஆர்ன் அடிக்கும் சத்தம் காதில் விழுவதற்கு முன்பே, கார் வீட்டின் முன்பு மின்னல் வேகத்தில் நிற்க வேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருக்கிறது. இந்த அமைதியான இடத்தில் யாருடைய தூக்கத்தை பற்றியோ ஓய்வெடுக்கும் குழந்தைகளை பற்றியோ கவலை கிடையாது.

இன்னும் பெரிய ரோதனை அவன் ரிவர்ஸ் எடுப்பது. ஆரனை வேகமாக அடித்தோ அடிக்காமலோ, 70 வேகத்தில் எடுப்பான். பின்னால் இருப்பவர்களோ, திருப்பத்தில் வருபவர்களோ, அதிர்ஷ்ட வசமா மாட்டாமல் இருந்தால் சரி!

எங்கள் வீட்டு காம்பவுண்டு சுவரில் சில மாற்றங்கள் செய்யும் போதும் இதே கதை தான். அவன் அடித்த ரிவர்ஸ் வேகத்தில், எங்கள் கூலி ஆள் தன்னுடைய சாமான்களை அப்படியே கடாசி விட்டு, ஓரே பாய்ச்சலில் ஓடினார். சாமான்கள் அந்த வேகத்தில் அப்படியே தெறித்து எகிறின. அதை பார்த்துக் கோண்டே இன்னும் வேகமாக காரை ஓட்டி சென்று விட்டான். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி!


பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஆயிற்றே , எதாவது ஆகி இருந்தால்….. என்று ஒரு சொல் கூட இல்லை. திரும்பி வந்தவுடனாவது , ஏதாவது சொல்வான் என்று எதிர் பார்த்தால் கண்டுக்கவே இல்லை.

இரண்டு நாட்கள் கழித்து , வழியில் பார்த்து கேட்டால் ‘ ஓ கே.. சாரீ.. என்று ஒரு முரட்டு தன்மையுடைய குரலில் இருந்தது ஒரே சொல் தான்!!


அந்த ‘நல்ல வழக்கங்கள்’ இன்னமும் அப்படியே.


மறுபடியும் சில நாட்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில், வாசலில் வைத்திருந்த எங்கள் ஸ்கூட்டரை கீழே இடித்து தள்ளி விட்டு வழக்கம் போல வேகமெடுத்து போய்விட்டான். ஆனால் அதை பார்த்த பக்கத்து வீட்டு பெரியவர் சத்தம் போடவே பெரிய மனது பண்ணி , காரை தூரத்தில் நிறுத்தி, ஸகூட்டரை எடுத்து வைத்து விட்டு போய்விட்டான்.

அந்த பெரியவர் எங்களை கூப்பிட்டு நடந்ததை விவரித்தார். அவரும் இந்த ஆள் செய்வது நன்றாகவே இல்லை என்று வருந்தினார். நாங்கள் அவன் வீட்டில் போய் மனைவியிடம் சொன்னபோது, அந்த அந்தம்மா ,மெத்தனமாக ‘சரி நான் சொல்கிறேன்’ என்றார். ஏதோ அவர் கணவர் இப்படி வெறி பிடித்தால் போல கார் ஓட்டுவது தெரியாதா என்ன?

அவ்வளவு எளிதாக அவன் எங்களுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்வான் என்று நாங்களும் எதிர் பார்க்கவில்லை. நான் அவனை ரோட்டில் பிடித்து கேட்கும் வரை அவன் , ‘அது நான் இல்லையே’ என்று முதலில் மறுத்து, பிறகு, அரை மனதாக ‘சாரி’ என்று சொல்லி வைத்தான்.
                                                   (courtesy Google)

அவன் வாழ்க்கை முறையே ‘அலட்டல் , பீற்றல் ‘ தான். அவன் எப்படி மாறுவான்? இன்று வரை அவன் திருந்தவில்லை. இந்த மாதிரி ஒரு படித்த , அரக்கன் ஏன் எங்கள் அழகிய வீதிக்கு குடி வந்தானோ! கடவுளே!